கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி, கோலார்பட்டி ஊராட்சிகளில் 49 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் நிதி ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இதையடுத்து, தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் 13 லட்சம் மகளிருக்கு கறவைப் பசு, ஆடு, நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் மகளிருக்கு கறவைப் பசுவும், ஒன்றரை லட்சம் மகளிருக்கு ஆறு லட்சம் ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சந்தைகளைத் திறப்பதற்கு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.