கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கரெடாய் தன்னார்வ அமைப்பு சார்பில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 23) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள், அலுவலர்களிடத்தில் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு மட்டுமின்றி, என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என, மருத்துவர், சமூக ஆர்வலர்களிடையும் கேட்டறிந்து வருகின்றார்.
இதைத்தொடர்ந்து, இன்று திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கிரடாய் தன்னார்வு அமைப்பு சார்பில், கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிறுவனம் சென்னையில் 1,500 படுக்கைகள், மதுரை தோப்பூரில் 500 படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இந்நிகழ்வின் போது, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா. கார்த்திக், பையா ஆர். கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், கல்லூரி முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காங்கிரசின் தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சித் தலைவராக செல்வபெருந்தகை தேர்வு