கைதுசெய்யப்பட்ட நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் ஏழு வருடங்களாக குழந்தைகள் காப்பகம் ஒன்று நடத்திவந்துள்ளார். இக்காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது உறவினர் ஒருவர் சேர்த்துள்ளார்.
இச்சூழலில், மேற்கொண்டு காப்பகத்தை நடத்தமுடியாமல் போனதால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதனை மூடியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட அச்சிறுமியை மட்டும் ஒப்படைக்காமால், வீட்டு வேலைக்காகப் பணியில் அமர்த்தியுள்ளார்.
அவ்வாறு பணியில் அமர்த்திய பின் தொடர்ச்சியாகச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் சில தினங்களுக்கு முன் அச்சிறுமி அவரது உறவினர் ஒருவரிடம் இதுதொடர்பாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் குழந்தைகள் நலப்பிரிவினருக்கும் சூலூர் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் அந்நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் காப்பகம் நடத்திவந்தபோது, இதேபோன்று அங்கிருந்த ஆதரவற்ற பெண் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினாரோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.