கேரளாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு டயர் லோடு ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர்பேட்டை பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, சாப்பிட இறங்கும்போது லாரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்தது.
இதைக்கண்ட ஓட்டுநர் செந்தில் உடனடியாக லாரியில் இருந்த தீயணைப்பானை எடுத்து டயர் மீது ஊற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் லாரியில் பிடித்த தீயை அணைத்தனர்.
இதையடுத்து, சூலூர் காவல் துறையினர் செந்திலின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் சீட்டு விளையாடி கடனாளியான காவலர் மாயம்!