கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று (நவம்பர் 17) காலை அன்னூர் சென்றுவிட்டு மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது போகலூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்நிலையில் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்றுகொண்டிருந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்தியா சம்பவத்தை நேரில் பார்த்ததும், தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
பின்னர் அவசர ஊர்திக்குத் தகவல் அளித்து வரவைத்த அவர் இருவரையும் அதன்மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். இதனைத் தொடர்ந்து, தம்பதியினர் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின் வீடு திரும்பினர்.
இந்தக் காட்சிகள் அருகிலிருந்த பெட்ரோல் பங்க் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காவல் ஆய்வாளர் நித்தியாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:TN Cabinet Meeting Postponed: அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு