கோவை: நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு முக்கியப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் காவல் துறையினர் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டது போன்றவை அடுத்தடுத்து பல சந்தேகங்களை கிளப்பியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தூசிதட்டப்பட்டு மறு விசாரணை தொடங்கியது.
மேலும் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து ஐஜி சுதாகர் விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, ஏப்.27இல் அதிமுகவைச் சேர்ந்த சஜீவனிடம் கோவை காவலர் பயிற்சி மையத்தில் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று (மே 06) இந்த வழக்கில், ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சஜீவனின் சகோதரர் சுனில் என்பவரிடம் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த வழக்கு குறித்து ஏழு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்