கறுப்புப் பெட்டி என்றால் நிறைய பேர் நினைப்பது அது கறுப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று. ஆனால், அது உண்மையல்ல; இதன் நிறம் ஆரஞ்சு. மரணம், துக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இது கறுப்புப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக விமானம், ஹெலிகாப்டர்களில் விமானியிருக்கும் முன் பகுதி, பின் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு கருவியாகும்.
1954ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வான்வழிப் பொறியாளரான டேவிட் வார்ன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விமானங்கள் விபத்துகளில் மாட்டிக்கொள்ளும்போது, அவை இறுதி பாதிப்புக்குள்ளான வரை அனைத்துத் தரவுகளையும் அறிந்துகொள்ள முடியும்.
விமானம், ஹெலிகாப்டர் வானில் பறக்கும்போது எவ்வளவு தூரத்திலிருந்து அவை கீழே விழுந்தாலும்கூட இந்தக் கறுப்புப் பெட்டி மட்டும் உறுதியுடன் இருக்கும். ஏனென்றால் அது டைட்டானியம் என்ற தனிமத்தினால் உருவாக்கப்பட்டது.
நீரிலும் செயல்படும் திறன்
எப்படிப்பட்ட உவர்நீரில் ஊறினாலும் இந்தக் கறுப்புப் பெட்டி பாதிப்படையாது.
கடல் நீருக்குள் மூழ்கினாலும், மூன்று மாதங்கள் வரை பாதிப்புக்குள்ளாகாமலேயே இருக்கும்.
வெப்பநிலை
இது எத்தகையச் சூழ்நிலையிலும் எவ்வளவு வெப்பநிலையிலும் அழியாமல் இருக்கும் தன்மையைக் கொண்டது. அதிகபட்சமாக 1,100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் உடையது.
சேமிக்கப்படும் பதிவுகள்
- விமானி அறையின் குரல் பதிவுகள், விமான கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடல்கள்
- விமானம் பறக்கும் உயரம், பறந்து சென்ற வேகம்
- விமானத்திற்குள் நிலவிய காற்றழுத்தம் குறித்த துல்லிய தரவு
- உயரே பறந்தபோது செயல்பாட்டிலிருந்த கருவிகளின் விவரங்கள்
- இயந்திரங்களின் செயல்பாடுகள் போன்ற பிற 400 தகவல்களைச் சேமிக்கலாம்
சமிக்ஞைகள்
விமானம் விபத்துக்குள்ளான பிறகு, இந்தப் பெட்டியிலிருந்து கிட்டத்தட்ட 30 நாள்கள் வரையில் சமிக்ஞைகள் வந்துகொண்டே இருக்கும்.
பயன்கள்
போர், ஆபத்துக் காலங்களில் விமானம் விபத்துக்குள்ளாக நேரிடுமானால், இந்தப் பெட்டியில் இறுதிவரையில் பதிவான தகவல்கள் மூலம் விபத்திற்கான காரணங்களைக் கண்டறியலாம்.
இதன் மூலமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கும்போது இயந்திரக் கோளாறுகளினாலோ அல்லது வேறு ஏதாவது செயல்களினாலோ ஏற்படுகின்ற விபத்துகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பெரும் உதவியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Crashed Army chopper blackbox - ஹெலிகாப்டர் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு