கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமு(38). தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து வரும் இவர், திருமண தகவல் மையம் மூலம் கிடைத்த தகவலின் பேரில் 31 வயது பெண்ணின் கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு தான் சுங்க இலாகாவில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் நானும் திருமணமான ஒருசில மாதங்களிலேயே கணவர் பிரிந்துவிட்டதால் உங்களை திருமணம் செய்ய எனக்கும் முழு சம்மதம் என்று கூறி உள்ளார். இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். அத்துடன் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து ராமு, அந்த இளம்பெண்ணிடம் நமது திருமணத்துக்கு துணிகள் வாங்க செல்லலாம் என்று கூறி இருவரும் ஜவுளி கடைக்கு சென்று ரூ.50 ஆயிரத்துக்கு திருமண ஆடைகள் வாங்கி உள்ளனர். இதற்கான தொகையை அந்த பெண் கொடுத்துள்ளார். ஆடைகளை ராமுவே வைத்துக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராமு தனக்கு வங்கி கணக்கு இல்லை என்றும், முன்னாள் மனைவி லட்சுமியின் கணக்கை தான் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்து, அந்தப் பெண்ணிடம் லட்சுமி என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் போட ராமு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் 25 ஆயிரம் ரூபாய் அந்த கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதேபோல ராமு துணிக்கடையில் முன்னாள் மனைவி லட்சுமியுடன் போனில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் யார் என கேட்டபோது முன்னாள் மனைவி லட்சுமி என தெரிவித்த ராமு, அந்தப் பெண்ணிடம் போனை கொடுத்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணிடம் பேசிய முன்னாள் மனைவி லட்சுமி, அந்தப் பெண்ணுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து, இனி நான் ராமுவிற்கு போனிலும் தொடர்பு கொள்ள மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் ராமுவின் நடவடிக்கையில் அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படவே ராமு குறித்து விசாரித்ததில், ராமு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த இளம்பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமு, சுங்க இலாக்கா அதிகாரி இல்லை என்பதும், அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் என்பதும், மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றதும் தெரியவந்தது.
அதேபோல ராமுவிற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் ராமு மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் ராமு மற்றும் அவரது மனைவி லட்சுமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 170,171 மற்றும் 420 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆடை உள்ளிட்ட போலி ஆதாரங்களை பறிமுதல் செய்து, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூ.29,500 திருட்டு