கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகள், பீளமேடு ஹட்கோ காலனி அடுக்குமாடி வீடுகளை வீட்டு வசதி வாரிய அமைச்சர் சு. முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய அவர், "சிங்காநல்லூரில் சூர்யா நகர், செந்தில் நகர், அண்ணா நகர், சீனிவாச நகர், பத்மினி நகர் பகுதிகளில் ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு பொதுவழி தனியாரிடம் இருந்தது. அந்த இடத்தை அவர்கள் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்கள். அதை வாங்கியவர்கள் அந்த இடத்தை அடைத்துவிட்டனர்.
எனவே அப்பகுதி மக்கள், தங்களுக்கு வழி வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். இது தொடா்பாக, துறை அலுவலர்களிடம் பேசி வழி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக 960 வீடுகளைக் கட்டித் தர தயாராக உள்ளோம். இந்த சிங்காநல்லூர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டவர்கள் சிலர், பணம் கட்டாமல் இருந்துவிட்டனர்.
பணம் செலுத்தாதவர்கள் குறைந்த வட்டியுடன் கூடிய தொகையைச் செலுத்தினால், தற்போது புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் ஒதுக்கீடுசெய்யப்படும். கோவையில் எங்கெல்லாம் கட்டடங்கள் மோசமாக உள்ளனவோ, அங்கெல்லாம் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதில் பயனாளிகளைக் கட்டச் சொல்வது ஒரு லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை மட்டுமே. மீதமுள்ள தொகையை அரசே செலுத்தும்.
கவுண்டம்பாளையம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை பொதுமக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யாமல் உள்ள வணிக வளாகம் உள்பட பல்வேறு இடங்கள் விற்பனை செய்வதில் முறைகேடு நடந்துவருவதாகப் புகார் வந்தது. ஆனால் அதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ