கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கடந்த 29ஆம் தேதி உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப் பகுதிகளிலிருந்து 295 பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, கைவினை மற்றும் முகச்சாயம் பூசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பழங்குடியினர் பள்ளி, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக பங்காற்றினர்.
வெற்றி பெற்ற 80 மாணவர்களுக்கும் சான்றிதழ், பதக்கத்தை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியா சேவியர் வனத்துறை அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வில், வனஉதவி அலுவலர் செல்வம், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் அருகிலுள்ள வனச்சரக அலுவலகம், அந்தந்த பள்ளிகள், தபால் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.