கோவை மாவட்டம் சாடிவயல் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி சீங்கப்பதி, சர்க்கார் போரத்தி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளது.
கேரளா வனப்பகுதியை ஒட்டி இக்கிராமங்கள் அமைந்துள்ளதால் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும் இந்நிலையில் சீங்கப்பதி கிராமத்தை சேர்ந்த வனத்துறை சூழல் சுற்றுலா ஊழியர் முருகன் என்பவர் இன்று(ஆக.12) காலை இயற்கை உபாதையை கழிக்க கோவை குற்றாலம் செல்லும் சாலையில் வந்துள்ளார்.
அப்பொழுது புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை திடீரென முருகனை துரத்தி தாக்கியது. இதில் கால் மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் அடைந்த அவரை கிராம மக்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக யானைகள் தினத்தன்று கோவை வனத்துறையில் பணியாற்றும் சூழல் சுற்றுலா ஊழியர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பழங்குடியினர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யானை தந்தம் கடத்தல் - ஒருவர் கைது