கோவை: கரோனா பரவலால் சுற்றுலாத் தளங்கள் முன்னதாக மூடப்பட்ட நிலையில், கோவை குற்றாலம் சுற்றுலாத் தளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோவையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கோவை குற்றாலத்தில் இனிமேல் வாரநாள்களில் 750 பேர், விடுமுறை நாள்களில் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தற்போது அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”750 பேரை ஐந்து குழுக்களாகப் பிரித்து குழுவிற்கு 150 பேர் என
காலை 9 மணிமுதல் 10 மணிவரை
காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை
நண்பகல் 12 மணிமுதல் 1 மணிவரை
மதியம் 1.30 மணிமுதல் 2.30 மணி வரை
மதியம் 3 மணி முதல் 3.30 மணி வரை
என்கின்ற மணியளவில் அனுமதிக்க உள்ளோம், விடுமுறை நாள்களில் 200 பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் கோவை குற்றாலத்திற்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும், வரும்பொழுது கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சாடிவயலில் இருந்து குற்றாலம் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.