பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார், கோட்டூர், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைக் கண்டறிய காவல் துறை தனிப்படை அமைத்து தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்துள்ள மஞ்சநாயக்கனூர் பூங்கா நகரில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக ஆழியார் காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது துறையூர் மேட்டைச் சேர்ந்த நிஜுசுதர்சன் (25), அவரது மாமனார் ராஐகோபால் (43) இருவரும் புதிதாக கட்டப்பட்டுள்ள அவரது இல்லத்தில் பால் காய்ச்சுவதற்குப் பதிலாக, சாராய ஊறல் போட்டு, குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதனையடுத்து கள்ளச் சாராயத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர், குக்கர் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
யூ-டியூப் காணொலியைப் பார்த்து திராட்சைப் பழங்கள், மரப்பட்டை ஆகியவற்றை ஊறவைத்து அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சியது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து மாமனார், மருமகன் இருவரையும் கைது செய்த ஆழியார் காவல் நிலைய காவலர்கள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாராயம் காய்ச்சுபவராக மாறிய பால்காரர்: ஊரடங்கால் திசைமாறிய தொழில்!