வால்பாறையை அடுத்த சவரங்காடு பங்களா பாடி பகுதிக்கு, நள்ளிரவு 2 மணி அளவில் வந்த மூன்று யானைகள் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை மோதி சத்தம் எழுப்பியுள்ளன. அதை கேட்டு கண்விழித்த அப்பகுதியினர் எழுந்து பார்க்கும்போது, யானைகள் வீட்டை இடித்து தள்ளிக் கொண்டிருந்திருக்கின்றன.
உடனடியாக அனைவரும் பின்புறம் வழியாக ஓடித் தப்பித்தனர். இதையடுத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இருப்பினும், யானைகள் திரும்பி விடுமோ என்ற அச்சத்தில், யாரும் தூங்காமல் இரவு முழுவதும் தீப்பந்தங்களுடன் கண் விழித்திருக்கின்றனர்.
பங்களா பாடி பகுதியில் இந்நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இனிமேலாவது யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில், வேட்டைத் தடுப்பு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அத்துமீறுகிறதா ஆதிப்பெரு உயிர் - ஆக்கிரமிக்கப்படும் யானையின் வலசை பாதைகள்!