சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராசாமணி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் முற்றிலுமாக அகற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிலிருந்து (மார்ச் 2) வேலையை தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலில் 64,650 பேரில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். அவர்கள் விருப்பப்பட்டதால் அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு 4,467 வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதல் வாக்குச்சாவடிகள்:
கடந்த தேர்தலைவிட 1,085 வாக்குச்சாவடிகள் 106 இடங்களில் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 788 அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால், சிவிஜில் செயலி மூலமும் புகாரளிக்கலாம்.
சிவிஜில் செயலி:
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து தற்போதுவரை 85 புகார்கள் வந்துள்ளன. அரசுத்துறை அலுவலர்கள் மீது நேரடியாக புகாரளிக்கலாம். அவர் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமார் 50 வாக்குச்சாவடிகள்வரை வனப்பகுதி எல்லையில் இருக்கிறது. கோவை மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் இருப்பதனால் தேர்தல் விவகாரங்கள் குறித்து இன்று (மார்ச்3) பாலக்காடு, திருச்சூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படவிருக்கிறது.