கோவை: அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் டிமாங் திவ்யாங்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து 25:30 மணி நேரம் ஃபேஷன் ஷோ நடத்தி கின்னஸ் சாதனை படைத்த ஷோபனா மற்றும் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகிகளுடன் தேசிய கூடைப்பந்து போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீராங்கனைகள் ராம்ப் வாக், வீல் வாக் செய்தனர். வண்ண ஒளியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேடையில் தோன்றியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உன்னால் முடியும்: ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்வது புதிய அனுபவமாக இருப்பதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம், வீட்டில் முடங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் வெளியே வரமுடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். வேலைவாய்ப்பில் அரசு தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில், உதவிகோரும் நிலைமாறி மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்கு உதவும் நிலை உருவாகும் என்றனர்.
இந்நிகழ்வில் லீமா அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்டின், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் சுவர்ணலதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி வீரர்களை கௌரவித்தனர்.
இதையும் படிங்க: 'ராம நவமியன்று ஜேஎன்யூவில் வன்முறை... 6 மாணவர்கள் காயம்...'