கோயம்புத்தூர்: காளப்பட்டி சுகுணா மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
கூட்டத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் நகர்ப்புறத்தில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி, “உள்ளாட்சித் தேர்தலுக்காக இன்று தொடங்கும் விருப்ப மனு நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறும். யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தாக்கல்செய்யலாம். அதே வேளையில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.
தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நம்மைப் பார்த்து எதிரிகள் பயப்பட வேண்டும். எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதைப் பார்த்து முணுமுணுப்பது சரியாக இருக்காது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் 275 வார்டுகளிலும் வெற்றிபெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 298 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடிக்கு பூத் கமிட்டி அமைத்து, 12 பேர் வீதம் கட்டாயம் பணியாற்ற வேண்டும். நான்கு நாள்களில் பூத் கமிட்டி உருவாக்கிட வேண்டும்.
நம்மதான் ஆளுங்கட்சி, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின், நம்மைக் கண்டுதான் எதிரிகள் பயப்படணும். அவர்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் இரண்டு அடி எடுத்துவைக்க வேண்டும்” எனத் தொண்டர்களுக்கு உற்சாக டானிக் அளிக்கும்விதமாகப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஆ. ராசா, “திமுகவிற்கு செந்தில்பாலாஜி வந்தபோது முதலில் தயக்கம் இருந்தது. ஆனால், தலைவரின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும், தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என அவர் தீவிரமாகச் செயல்படுகின்றார். கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்குத் தெரியும். திமுகவிற்கு எதிர் கருத்தைப் பரப்பும் நிலை எப்போதுமே இருந்துவருகின்றது.
இந்தியாவில், பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கின்றார். இந்த முறை மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் முன்பு ஒரு அமைச்சர் இருந்தார். (மறைமுகமாக எஸ்.பி. வேலுமணியைக் குறிப்பிட்டார்) முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில்பாலாஜி, கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவியல் ரீதியாக அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியலை அதிமுகவினருக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.