கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் அருக்கானி என்ற அருகாத்தாள். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு, அவரது தாலி உள்பட ஏழு சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அருக்கானியின் தங்கை மகனான ரவிபிரகாஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால் காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பலரிடம் கடன் வாங்கி அதனை திரும்ப தர முடியாமல், அருக்கானியின் வீட்டிற்குச் சென்றபோது, அவரை போர்வையால் இறுக்கி கொன்றுவிட்டு நகைகளுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
மேலும், அந்நகைகளை யாருக்கும் சந்தேகம் வராமல் பல தவணைகளில் அடமானம் வைத்து பணம் பெற்று, கடன்களை அடைத்ததும், தாலிக்கொடியில் இருந்த தாலியை மட்டும் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதும் தெரியவந்தது.
இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ரவிப்பிரகாஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Video: ஹோட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கிய இளைஞர் கைது - பதறவைக்கும் சிசிடிவி காட்சி