திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவைக்கு வருகைதந்துள்ள திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கோவை மாநகர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இன்று (டிச. 07) காலை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பொதுமக்கள், உழவர்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதிக்குச் சென்றார்.
உலியம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். இதனிடையே செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “திமுக பரப்புரைகளின்போது மக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளனர்.
கோவையில் உள்ள விவசாயிகளுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ்நாட்டில் விவசாய நிலம் வழியாக குழாய்கள் பதியப்படுகின்றன. கோவையில் தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. மருத்துவமனைகள் சீராக இல்லை. பல இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது.
சாலைகள் சீராக இல்லை. பரப்புரையின்போது திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கினால் திமுக வாக்கு பிரியும் என்று பல கட்சிகள் கூறுவது பொய்ப் பரப்புரை. யார் கட்சி தொடங்கினாலும் திமுகவை பாதிக்காது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - போலீஸ்க்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்