2010ஆம் ஆண்டு கோயம்புத்தூரில், பத்து வயதான சிறுமியும் எட்டு வயதான அவளது சகோதரனும் கடத்தப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் கால்வாயில் சடலங்களாக மீட்கப்பட்டனர். விசாரணையில், காமுகர்கள் இருவர் சிறுமியை துடிக்கத் துடிக்க வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்ததும், சிறுவனிடமும் ஈவு இரக்கமற்ற முறையில் நடந்து கொன்றதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, தப்பிச் செல்ல முயன்ற மோகன கிருஷ்ணனை காவலர்கள் சுட்டு கொன்று பிடித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்கு, மூன்று ஆயுள் தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனோகரன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நீதிபதிகள் நாரிமன், சூர்யகாந்த், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இது மிகவும் அரிதான வழக்கு. மிகவும் கொடூரமான எண்ணத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, ஆராய்ந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயங்கரமான சம்பவம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக இந்த வழக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனோகரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: கோவை சிறுமி-சிறுவன் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!