கோயம்புத்தூர்: கோவை மாவட்ட எல்லையில் செல்போன்கள் தொலைந்துவிட்டதாகவும் திருடப்பட்டுவிட்டதாகவும் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 60 லட்சம் மதிப்புள்ள 106 செல்போன்கள் இன்று உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கோவை மாவட்டத்தில் 106 தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம். அதன் மதிப்பு ரூ.60 லட்சம். ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 350 செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளோம். மாதம் 100 செல்போன்களை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
போக்சோ வழக்குகள் தொடர்பான நடவடிக்கை: போக்சோ வழக்குகளைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 149 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். 60 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ஒன்பது வழக்குகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளோம். குழந்தைகளுக்கான குற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
பள்ளிக்கூடம் ப்ராஜெக்ட் மூலம் 28 நாட்களாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை 36 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். 10 வயதுக்குக்கீழ் உள்ள 12,000 குழந்தைகளை சந்தித்துள்ளோம். தொடர்ந்து இந்தச்செயல் நடைபெறும். இந்த ப்ராஜெக்ட் மூலம் இரண்டு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம்.
மாணவர்கள் மத்தியில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்களைத்தடுக்கும் வகையில் 347 குற்றவாளிகளைக் கைது செய்து 332 வழக்குகள் பதிவு செய்து, 3 அரை டன் குட்கா பறிமுதல் செய்துள்ளோம். பெட்டிக்கடைகளில் பான் மசாலா விற்பனை அதிகரிப்பதைத்தடுக்க 125 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து 5 கடைகளுக்குச்சீல் வைத்துள்ளோம்.
கஞ்சா தொடர்பான நடவடிக்கைகள்: கஞ்சாவைப் பொறுத்தவரை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-க்குள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாயும். வலி நிவாரணி மருந்துகளை போதைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளோம். மருத்துவர் சீட்டு இல்லாமல் யாருக்கும் வலி நிவாரணி மருந்துகளை மெடிக்கல்களில் விற்பனை செய்யக்கூடாது.
கிரைம் வழக்குகளைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் 311 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். மாவட்டம் முழுதும் பத்தாயிரம் கேமராக்கள் உள்ளன. தொடர்ந்து கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவிட் 19க்கு முன் இருந்ததை விட விபத்துகள் 10%ஆக மாறி உள்ளது.
பல்வேறு இடங்களில் குறிப்பாக துடியலூர் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திருநங்கைகள் குறித்து பல்வேறு புகார்கள் வருகின்றன. அவர்களை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளோம்’ என்றார்.
மேலும் அவர்களுக்கு சோசியல் வெல்பேர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து வேலைவாய்ப்பு உருவாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அட்டுக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை அங்குள்ள போராட்டக்காரர்களிடம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தாசில்தார் மூலம் புகார் பெற்று சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனி அருகே துப்பரவு பணியாளர் கொலை வழக்கு; மகளுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் கைது