மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
ஆனால், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில், “கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருவிக்கு வருகின்றன. மிகக் குறைந்தளவே நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாது என்பதாலும், வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாகவும்,மழைபெய்து அருவியில். நீர் வந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.