கோயம்புத்தூர்: ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேரும் வகையில் மக்கள் ஆசி யாத்திரை என்னும் சுற்றுப்பயணத்தை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி கோயம்புத்தூரில் தொடங்கியது. அன்றைய நாள் இறுதியில் திருப்பூருக்கு ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிட மாயையை உடைப்போம்
அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர். இதன்பிறகு பேசிய அண்ணாமலை, "எல். முருகன் மாநில தலைவராக இருந்தபோது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தவர். அந்த நான்கு பேரும் தற்போது திமுகவின் நிதிநிலை அறிக்கையை எதிர்த்து பேசி வருகிறார்கள்.
இவ்வளவு வேலைகளை நாம் செய்து மக்களை சந்திக்கும்போது ஏன் 2024 தேர்தலில் 30 எம்.பிகளையும், 2026 தேர்தலில் 150 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் நம்மால் பெற முடியாது? நிச்சயம் பெற முடியும். தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்து காட்டுவோம்" என்றார்.
பிறகு பேசிய எல். முருகன், "தமிழ்நாட்டில் தாமரையே மலராது என்று சொன்னார்கள். ஆனால் தற்போது பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் உள்ளார்கள். அனைத்து தரப்பு சமுதாயத்தினரும் அமைச்சர்களாக வாய்ப்பளித்த பிரதமர் மோடிதான் உண்மையான சமூக நீதி காவலன்" என்றார்.
இதையும் படிங்க: 'கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றுக'