கோவை: பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் ஆலோசனை வழங்கினார். இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காவலர்கள் சென்று 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
10 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் மொபைல் போன்கள் பயன்பாட்டின் மூலம் பல குற்றங்களில் மாட்டிக்கொள்கின்றனர். இதன்மூலமாக ஆன்லைனில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்பொழுது கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமில்லாது ஆசிரியர்களுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் போக்சோ குறித்து விழிப்புணர்வும் அவ்வாறு யாரேனும் பாதிக்க நேரிடும்போது, செய்யவேண்டியவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போக்சோ சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் கடந்த ஆண்டு 150 போக்சோ வழக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 88 வழக்குகள் பதியப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.
இதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தமிழ்மணி சீனிவாசன், ஆய்வாளர்கள் ஹரிகிருஷ்ணன், அனந்தநாயகி, சாந்தி, அருணாச்சலம் மற்றும் பெண் காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காவலர்களின் தனிப்பட்ட வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் இருக்கக்கூடாது- டிஜிபி உத்தரவு