மோட்டார் வாகன சட்டப்படி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரு சில பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமமின்றி பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவர் ஒருவர், விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டரை ஓட்டிச் சென்றது மற்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் டிராக்டரை ஓட்டிவந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அலுவலர்கள் உடனடியாக தணிக்கை செய்து விபத்து நடைபெறுவதற்கு முன்பாக இதுபோன்று வாகனங்கள் இயக்கும் சிறுவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், அந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால், இதுபோன்று 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் ஓட்டுநர் உரிமமின்றி கனரக வாகனங்களை அபாயகரமான முறையில் இயக்குவதாகவும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்கும் போலீசார், இதை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.