கோவை: கேரள மாநிலம் அலப்புழாவைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் தனது கார் ஓட்டுநர் சம்சுதீன் என்பவருடன் வேலை நிமித்தமாக கோவைக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் கேரளாவிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது நவக்கரை பகுதி அருேக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை வழிமறித்து, காரையும், அதிலிருந்த 27 லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிக்கொண்டு தப்பியோடியதாக, நவக்கரை காவல் நிலையத்தில் அப்துல் சலாம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. தேடுதல் பணியின்போது சிறுவானி பகுதியிலிருந்து அப்துல் சலாமின் காரினை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்ததில், காரின் பின் பகுதிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெட்டிகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 90 லட்சம் ரூபாய் பெங்களூருவிலிருந்து கடத்தப்பட்ட ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அப்துல் சலாமிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் மார்ச் 31 வரை நீட்டிப்பு