கரோனா தீநுண்மி பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அதனைச் சாதகமாகக் கொண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி அவற்றை விற்பனை செய்துவருகின்றனர். இதனைத் தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கோவை தடாகம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பழைய கட்டடத்தில் ஒரு பேரலில் 150 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றி காவல் துறையினர் அழித்தனர்.
கடந்த ஐந்து நாள்களில் மட்டும் துடியலூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க காவல் துறையினர் சோதனையை அதிகரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மருமகளை எரித்து கொன்ற கொடூர மாமியார்! மருமகள் மரண வாக்குமூலம்...