சென்னை: சூளைமேட்டை சேர்ந்தவர் சுதர்சன் வயது(24). இவர் மெடிக்கல் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் லோகாண்டோ என்கிற செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்டி பெண்களிடம் உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுது, தெரியாத செல்போனிலிருந்து பேசிய இளம்பெண் ஒருவர் மிகவும் நெருக்கமாக சுதர்சனிடம் பேசியுள்ளார். மேலும், விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதி அளித்துள்ளார்.
வீண் ஆசையும், விபரீதமும்
நேரில் ஒரு நாள் முழுவதும் தன்னுடன் உல்லாசமாக இருப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய் போதாது என கூறியதோடு, மேலும் இரண்டு தவணையாக 18 ஆயிரம் ரூபாய் வரை அந்த இளம்பெண் பெற்றுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த இளம்பெண் நேரிலும் வரவில்லை; போன் செய்தாலும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், எந்த செயலியின் வாயிலாகப் பணம் செலுத்தினாரோ, அதே செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணத்தைத் திரும்பப் பெற சுதர்சன் முயற்சி செய்துள்ளார்.
மீண்டும் உரையாடல்
அதிலும் தோல்வி அடைந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த இளம்பெண்ணின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது இளம்பெண் போனில் பேசியுள்ளார்.
உடனே தான் காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி புகார் அளிக்க உள்ளதாகவும் எனவே உடனடியாக தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 10ஆம் தேதி, மாலை ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
மறைந்திருந்த கும்பல் கைவரிசை
ஆனால் அங்குச் சென்ற சுதர்ஷனை, அங்குக் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு அவரது இரு சக்கர வாகனம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 1.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது.
மேலும் சிறிது நேரம் கழித்து, போன் செய்த அந்த கும்பல் சுதர்ஷன் காவல்துறைக்குச் செல்லக் கூடாது எனவும் இரு சக்கர வாகனம் மற்றும் செயின் தேவை என்றால் மேலும் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுமாறும் மிரட்டி விட்டு அழைப்பை துண்டித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த சுதர்சன், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 4 பேர் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Covid Spreads: 'இது செம அறிவிப்பால்ல இருக்கு' - டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்