இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுக்கக்கேடு ஆகியவை உத்தரபிரதேசத்தில் உச்சத்தை எட்டியுள்ளன. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஹத்ராஸில் நடந்த கும்பல் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க வந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்தது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஜனநாயக விரோத அரசாங்கத்தின் இந்த கோழைத்தனம் கண்டிக்கத்தக்கது. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த 19 வயது தலித்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, ஹத்ராஸுக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை, டெல்லி-உ.பி. தேசிய நெடுஞ்சாலையில் யோகியின் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
நான்கு ஆதிக்கசாதி இளைஞர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கை வெட்டி, முதுகெலும்புகளை உடைத்த பின்னர் அந்த இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இறுதிச் சடங்கில் குடும்பத்தினரைக் கூட அனுமதிக்காமல் காவல்அலுவலர்கள் வலுக்கட்டாயமாக அவரது உடலை தகனம் செய்துள்ளனர். ராகுலையும், பிரியங்காவையும் காவல்துறையினர் முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தவே, தனது ஆதரவாளர்களுடன் அவர்கள் சாலையில் அமர்ந்தனர். அப்போது ராகுலை கீழே தள்ளிய காவல்துறையினர் அவர் மீது லத்தியால் தாக்குதலையும் தொடுத்துள்ளது.
சங்பரிவார் பாசிஸ்டுகள், மாற்றுக் கருத்துகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத, சகிப்புத்தன்மையற்ற சித்தாந்தத்தை கொண்டவர்கள் ஆவர். தங்களை நோக்கி எதிர்கேள்விகள் எழுப்புபவர்களை ஒடுக்க அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். உ.பி.யில் கும்பல் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. பால்ரம்பூரில் நேற்று மற்றொரு தலித் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். எவ்வித உடல் கூராய்வும் மேற்கொள்ளாமல், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டது.
அதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். யோகி ஆட்சியின் கீழ், உ.பி. நாட்டின் குற்றவியல் தலைநகராக மாறியுள்ளது. ராகுல் அல்லது பிரியங்கா மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எந்த வன்முறை அல்லது குற்றத்திலும் ஈடுபடவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்க அவர்கள் அமைதியான பயணம் செய்து கொண்டிருந்தனர். அமைதியான ஜனநாயக வழியிலான எதிர்ப்புக்கான உரிமை இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்படுகிறது. இந்த உரிமை கூட மோடி அரசாங்கத்தின் கீழ் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதிலும், அரசியலமைப்பை களங்கப்படுத்துவதிலும் உ.பி. முதல்வரான யோகி, மோடி மற்றும் அமீத்ஷாவை விஞ்சிவிட்டார்.
நீதியின் கடைசி நம்பிக்கையாக, மக்கள் இதுவரை நம்பியிருக்கும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதித்துறையிலிருந்து கூட நீதியை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையில், பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பே இதற்கு ஒரே தீர்வாகும். இசட்-பிளஸ் வகை பாதுகாப்பைக் கொண்ட ராகுல் போன்ற தலைவர்கள் கூட இத்தகைய இழிவான முறையில் நடத்தப்பட்டால், சலுகைகள் இல்லாத ஒரு சாதாரண சாமானிய மனிதரை இந்த பாசிச அரசாங்கம் எவ்வாறு நடத்தும் என்பதை எவர் ஒருவரும் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியும்.
உ.பி. காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத கொடூரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பைஸி வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.