நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய பொருளாக விளங்கும் பால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஜுன் 1ஆம் தேதி உலக பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
மனிதன் பிறப்பில் தொடங்கி, இறப்பிற்கு பின்னரும் உலகில் தேவைப்படும் உணவுப் பொருளான பால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்குகிறது.
இத்தகைய அத்தியாவசிய பொருளாகவும், உணவாகவும் விளங்கி வரும் பாலினை தரமானதாக கலப்படமின்றியும், தங்கு தடையின்றியும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்திட உலக பால் தினமான ஜூன் 1இல் "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் உறுதியேற்கிறோம்.
மேலும் வெயில்,புயல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் எதுவாயினும், தங்களது குடும்பங்களில் சுக, துக்க நிகழ்வுகள் எது நிகழ்ந்தாலும் ஆண்டில் 365 நாட்களும் மக்கள் நலன் சார்ந்து, "மெழுகுவர்த்தியைப் போல் தங்களை உருக்கிக் கொண்டு" தன்னலம் கருதாமல் செயல்பட்டு வரும் "லட்சக்கணக்கான பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வில் இனி வரும் காலங்களிலாவது விடியல் பிறந்து, வசந்தம் வீசட்டும்" என உலக பால் தின நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து பால் முகவர்கள் சமுதாயத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வரும் தமிழ்நாடு அரசு இனியாவது பால் முகவர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்ற முன் வர வேண்டும், அதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.