உலக மாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day - MHD) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதுதான் இந்த நாளின் நோக்கம்.
புவியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கை ஏதோ ஒரு வகையில் சோதனையை வைத்திருக்கிறது. அதில் மிகவும் துன்பப்படுபவர்கள் பெண்கள் மட்டுமே. மாதவிடாய் என்ற பெயரைக் கேட்டாலே ஆண்கள் மட்டுமல்ல இந்த சமூகமே பெண்களை ஒதுக்கி வைப்பதையே முதல் சிந்தனையாக நினைத்துக் கொண்டிருக்கிறது. மாதம் முழுக்க பெண்களைத் தேடும் ஆண்களோ, வீடோ அந்த நாட்களில் மட்டும் வீட்டை விட்டு அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். பெண்களும் வேறு வழியின்றி பெரும் வலியோடு வீட்டுக்கு யாசகம் கேட்க வந்தவர்களைப்போல் வெளியில் அமர்ந்திருப்பார்கள்.
மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. ஆண்களும் மற்ற உயிரினங்களும் எப்படி தங்களது இயற்கை கழிவுகளை கழிக்கிறார்களோ அதேபோல்தான் பெண்களுக்கும் மாதவிடாய் அமைந்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் புதிதாக பருவமெய்திய பெண்கள் மாதவிடாய் ஆகும்போது அவரை, அவரது தாயோ அல்லது அவரது சகோதரியோகூட வீட்டைவிட்டு ஒதுக்கிவைப்பார்கள். தான் பெற்ற துன்பத்தை அவளும் பெற வேண்டும் என்ற எண்ணமா? இல்லை அதனை உடைக்க அவர்களுக்கு தைரியமில்லையா என்பது இங்கு பெரும் கேள்வி!
இந்த நவீன உலகில், நாப்கின் வைத்துக்கொண்டு பெண்கள் அலுவலகத்திற்கு வந்துகொண்டுதானே இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புபவர்கள், கிராமத்தை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். நாப்கின் வைத்துக்கொண்டு பெண்கள் அலுவலகத்துக்கு வந்தாலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் படும் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆண்களால் பெண்களின் வலியை அனுமானிக்க முடியுமே தவிர நிச்சயம் அனுபவிக்க முடியாது. இதனால் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு அளித்தால் என்ன என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பாமல் இல்லை. ஆனால் அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அறத்தின்பால் பார்த்தால் அவர்களுக்கு அந்த தினங்களில் விடுப்பு அளிக்க வேண்டும்.
அலுவலகத்தில் பெண்களின் நிலைமை இப்படி என்றால், பள்ளிகளில் சிறுமிகளின் நிலைமை என்னவென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தங்களது நாப்கின்களை மாற்ற வேண்டும். அதற்கான தனி இட வசதி பள்ளியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலில்லை. அப்படியே இருந்தாலும் கழிவுகளை கொட்டுவதற்கு கூடைகள் இல்லவே இல்லை. இதனால் மாணவிகள் நாப்கின்களை ஆங்காங்கே போடுவது, கவரில் மடித்து தனது புத்தக பையில் மறைத்து வீட்டுக்கு செல்லும் வழியிலோ அல்லது வீட்டுக்குச் சென்ற பிறகோ போடுவது போன்ற நிலைமையை நினைத்துப் பார்த்தாலே பதறுகிறது.
தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் சிறுமியரின் வருகைப்பதிவைக் கூட்டலாம். வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்புரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியில் சிறுமியரின் சேர்க்கை 11% அதிகரித்தது. வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியருக்குத் தண்ணீர் மற்றும் துப்புரவு வசதி 47% மட்டுமே கிடைக்கிறது.
இது இப்படி என்றால், கிராமப் பெண்கள் இன்னும் தங்களது மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை உபயோகப்படுத்தாமல் வெறும் துணியை மட்டும் உபயோகப்படுத்தும் நிலையும் தொடர்ந்துதான் வருகிறது. இதனால் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த டிஜிட்டல் இந்தியா முதலில் நாப்கினுக்கு அதிகளவிலான ஜிஎஸ்டியை நிர்ணயித்தது. பெண்களின் அத்தியாவசியத் தேவையான நாப்கினுக்கு அதிகளவு ஜிஎஸ்டியை நிர்ணயித்துவிட்டு பின்னர் நடந்த போராட்டத்தால் அதன் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளுக்கே போராட்டம் நடத்தும் சூழல் இருக்கும் நமது நாட்டில், இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பப்படும்போது அவர்களை "தீட்டு" என்று வீட்டைவிட்டு ஒதுக்கிவைப்பதெல்லாம் வன்மத்தின் உச்சம். மாதவிடாய் தீட்டு இல்லை அது ஒரு இயற்கை நிகழ்வு, கழிவுகள் வெளியேறுகின்றன என்று அதை இயல்பாக எப்போது எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அன்றுதான் இந்தச் சமூகம் முழுமை பெறும். அப்படியெல்லாம் இப்போது யாரும் ஒதுக்கிவைப்பதில்லை. இந்த நவநாகரீக வளர்ச்சி உலகத்தில் இப்போது அப்படி நடைபெறுவதே இல்லை என வாதிடுபவர்கள், கிராமத்திலும் இந்த வளர்ச்சி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
உடல் ஒட்டுமொத்தமாக வளர்ந்தால்தான் அது வளர்ச்சி. உடலில் கால் மட்டும் வளர்ந்தால் அதற்குப் பெயர் வளர்ச்சி இல்லை வீக்கமாகவோ, யானைக்கால் நோயாகவோதான் இருக்கும். அதுபோலத்தான், மாதவிடாய் காலத்தில் நகரத்துப் பெண்கள் இயல்பாக இயங்குவது போல் கிராமத்துப் பெண்களும் எப்போது இயல்பாக இயங்குகிறார்களோ அன்றுதான் இந்த ஒட்டுமொத்த சமூகமும் அறிவால் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று அர்த்தம்.
உலகின் ஒட்டுமொத்த நாடுகளிலேயே பெண்களை அதிகம் மதிப்பது இந்தியாதான் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் நாம்தான் மாதவிடாய் வந்தால் அதே பெண்ணை ஒரு உயிராக மதிக்காமல் யாரோபோல் ஒதுக்கி வைக்கிறோம். நாள் முழுக்க ஓடாய் தேய்ந்து வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்களுக்கு அந்த நாட்களில்கூட ஓய்வு கொடுக்காமல் வேலைப்பளு சுமத்தப்படுகிறது. ஆனால், உலகிலேயே இந்தியர்கள்தான் மனிதம் அதிகம் படைத்தவர்கள் என்று கூறிக்கொள்கிறோம். இது எவ்வளவு பெரிய முரண்?
அன்னையர் தினத்தை நமது நாட்டில் உணர்ச்சிப் பூர்வமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இங்கு பெண்களை மதிக்கும் விதமோ தலைகீழ்! எனவே, மாதவிடாயை தீட்டு என்று கூறி பெண்களை ஒதுக்கிவைப்பதை நிறுத்தும்வரை நாம் அன்னையர் தினம் கொண்டாடுவதையும் நிறுத்திவைக்கலாம். ஏனெனில் அதுதான் அறம்!