பெண்களின் தற்காப்புக்கு கண்ணியம், சமநிலையும் இருந்தால் போதுமானது எனவும்; வன்முன்றையின்மையைவிட அது சிறந்தது எனவும்; பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு உதவும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
மய்யம் மாதர் படையைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்பவர், 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தற்காப்புக் கலைகளைப் பெண்கள் கற்க வேண்டும்' என்று காணொலி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனை ரீ-ட்விட் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கண்ணியம், சமநிலை மட்டும் போதுமானது. வன்முறையின்மையைப் பின்பற்றினால் வன்முறை செய்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு உதவும்' எனப் பதிவு செய்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெண்கள் ஏன் தற்காப்புக் கலையைக் கடைப்பிடிக்க கூடாதா என்று நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.இதையடுத்து, 'கமல்ஹாசனின் பதிவை தவறுதலாகப் பலர் புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கின்றது. கமல்ஹாசன் கூறுவது பெண்கள் தன்னம்பிக்கை உடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்பதே" என சினேகா மோகன்தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.