கரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப்பணியாளர்களின் பங்கு அபரிவிதமானது. அதிலும், முன்களப்பணியாளர்களாக பங்கெடுத்த பெண்களின் மனதிடம் என்பது குடும்பம் மற்றும் இடைவிடாத சேவைப்பணி ஆகிய இரண்டையும் சீர்குலையாமல் வைத்துக்கொண்டு போராடிய இரட்டை சவாரிக்குச் சமம் ஆனது.
இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலி சாவித்ரி மனம் திறந்து பேசியது அனைவருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இருந்தது. அவர் பேசும்போது, 'கரோனா காலத்தில் பணிபுரிவதற்கு முன்பு எங்களுக்கும் அச்சம் இருந்தது. அதையெல்லாம், தாண்டி பொதுமக்கள் பலரும் நம்மை நம்பி தான் இருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டு, எவ்வளவு என்னாலே அதிகபட்சம் சேவையாற்ற முடியுமோ, அதை செய்தேன்.
கரோனா காலத்தில் எண்ணற்ற நோயாளிகளுக்கு, பயம், மனக்குழப்பங்கள், கோபம், படபடப்பு ஆகியவை இருந்தது. அதனை ஒரு தாய்மை உணர்வோடு அணுகினோம். கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையைவிட உளவியல் ரீதியான நம்பிக்கை அளித்தோம். மிகச்சிறந்த அளவில் செவிலி சேவையை செய்தோம்.
கடந்த மகளிர் தினத்தில் வந்த கரோனாவை, இந்த மகளிர் தினத்தில் தடுப்பூசி மூலமாக எதிர்கொள்கிறோம். சந்தோஷமாக இருக்கோம். அந்த கரோனா உச்சமாக இருந்த காலத்தில், எங்களது குடும்பத்தினர் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எங்களது குழந்தைகளுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அரவணைப்பை கொடுக்கமுடியவில்லை. அதையும்தாண்டி நாட்டிற்கு பக்கபலமாக இருந்து கரோனா பணியாற்றியதை நினைத்து, ரொம்பப் பெருமைப்படுறேன்’ என்றார் நெகிழ்ச்சியாக.
இதுகுறித்து பேசிய செவிலி கிரேஸ் அனிதா, 'கரோனா காலத்தில் முதலில் செவிலிப் பணிதான் பிரதானம்; பின் குடும்பம் எனும் மனநிலையில் தான் பணிபுரிந்தோம். 40 வயதிற்கு மேற்பட்ட செவிலிக்கு, உடலளவில் பலதரப்பட்ட பிரச்னைகள் இருக்கும். அதையும் தாண்டி, அனைவரும் தங்களது வாழ்வை அடமானம் வைத்து மக்கள் பணியாற்றினார்கள். கரோனா ஊரடங்கின்போது, சரியான போக்குவரத்து இல்லாதபோதும், நாங்கள் பணியாற்றினோம்.
செவிலியாக இருந்து தாய் ஆனவர்கள், தங்களது குழந்தைகளைப் பார்க்கக் கூட வீட்டிற்குச் செல்லாமல், அழுதுகொண்டேகூட பணியாற்றியதைப் பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்குச் சென்றவுடன் உடனடியாக, தனிமைப்படுத்திக்கொள்வதால், பச்சிளங்குழந்தைகளை உடனடியாக அரவணைக்கமுடியவில்லை. இப்போது கொஞ்சம் மன நிம்மதி அடைந்திருக்கேன்.
பொதுவாக ஆண்கள் தான் எல்லோரும் வலிமையானவர்கள் என்று சொல்வார்கள். அதையும் தாண்டி, கரோனா காலத்தில் பெண்கள் தான் மனதளவிலும் உடல் அளவிலும் வலிமையானவர்' என்றார் உறுதியாக.
தனது மனைவியின் மனதிடம் குறித்து செவிலியர் அழகர் ராஜா உணர்வுப்பூர்வமாக பேசுகையில், 'நானும் எனது மனைவியும் இதே மருத்துவமனையில் தான் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறோம். இருவரும் செவிலிப் பணி செய்யும்போது, கரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயத்தில் நான் கரோனா கால பணியில் இணைந்தேன். அப்போது 14 நாள்கள் ஒற்றைப் பெண்ணாக எந்த ஒரு உதவியும் இல்லாமல், என் இரண்டு குழந்தைகளையும் மனைவி பார்த்துக்கொண்ட தருணம் அசாத்தியமானது. எனக்கு என் மனைவி தான், கண்முன் தெரியும் மனதைரியம் மிகுந்த பெண்’ என்றார், நெகிழ்ச்சியாக.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, 'கோவிட் என்பது மக்களைப் போன்றே மருத்துவர்களுக்கும் புரியாத புதிராகவே தான் இருந்தது. அதை புத்தகங்களில் படித்துள்ளோம். ஆனால் சந்தித்ததில்லை. எனவே, அது தங்களுக்கு சவாலான ஒரு விஷயமாக இருந்தது. கவச உடைகள் அனைவருக்கும் வழங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டோம். அரசும் உதவியது. ஊரடங்கு போடப்பட்டபோது அனைவருக்கும் உணவு தேவை என்ற சூழ்நிலையையும் எதிர்கொண்டோம். மருத்துவ ஊழியர்களைப் பொறுத்தவரை கடை நிலை ஊழியர்களில் இருந்து செவிலியர், உதவியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்பவர்கள் என்று அனைவரும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிகளை மேற்கொண்டனர்.
அவர்கள் கூறிய ஒரு விஷயம் இந்த தொற்று எங்களிடமிருந்து எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குப் பரவினால், என்ன செய்வது என்ற அச்சம் மட்டும் தான். எனவே, அத்தகையவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை எல்லாம் மேற்கொண்டோம். இது மேலும் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும். அரசு மற்றும் மருத்துவர்கள் கூறக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பெண் மற்றும் ஆண் ஊழியர்கள் அனைவரும் சமமாக வேலை செய்தனர். இருப்பினும் பெண்கள் பலரும் இக்காலத்தில் வேலை செய்தது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. செவிலியின் பணி என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாக இருந்தது. பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை. அதற்கு கோவிட் காலமே சாட்சி. பெண்களைப் பொறுத்தவரை எவ்வளவோ பிரச்னைக்களுக்கிடையே தான் வேலைக்கு வருகிறார்கள். அப்படியிருக்கும்நிலையில்கூட, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பது மிகவும் பாராட்டுக்குரியது. பெண்கள் இல்லாத துறையே தற்போது இல்லை. எனவே, பெண்களால் அனைத்தும் முடியும்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வேலூரைச் சேர்ந்த மருத்துவர் பரணி கூறுகையில், 'இந்தக் கரோனா காலத்தில் நிறைய மருத்துவர்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது. இந்தக் கரோனா காலம் முடிவுறாமல், ரொம்ப நாள்களைக் கடத்திவிட்டது. இந்த கரோனா கால இடைவெளி என்பது உணவுப்பழக்கம், ஆரோக்கியம் இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாங்களும் கரோனா காலத்தில் நிறைய பதற்றத்துடன் தான் பணிபுரிந்தோம். அதிகாலைகளில் எழுந்து சேவையாற்றினோம்' என்றார் பூரிப்புடன்.
வேலூரைச் சேர்ந்த செவிலி சுமதி கூறுகையில், 'கரோனா காலம் கஷ்டமானதுதான். சரியான போக்குவரத்து வசதிகள் இருக்காது. சரியான நேரத்துக்கு வரமுடியாது. அனைவருக்கும் மனதளவில் நம்பிக்கை கொடுத்து பணியாற்றினோம். நிறையபேர் குணமாகி வெளியில் சென்றார்கள். வாழ்த்தினார்கள்' என்றார் உணர்வுப்பூர்வமாக.
முன்களப்பணியாளர் மல்லிகா கூறுகையில், 'வரும் நோயாளிகள் அனைவரையும் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவி சுத்தப்படுத்தி, அவர்களை மருத்துவமனையின் உள்ளே அனுமதிப்போம். அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வது எங்கள் பணி. கரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக, நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டால் ஒருவழியாக சமாளித்தோம்' என்றார் கண்களில் நீர்த் ததும்ப...
இதையும் படிங்க:அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின்.. அதிரவைக்கும் 7 உறுதிமொழிகள்!