சென்னையில் வீட்டு வேலை பார்ப்பதற்காக ஆன்லைன் மூலம் ஜஸ்ட் டயல் மற்றும் சுலேகா ஆகிய வலைதளங்களில் வேலை ஆட்கள் வேண்டும் என விண்ணப்பிப்பவர்களை குறிவைத்து பெண் ஒருவர் மோசடி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அசோக் என்பவர், இது தொடர்பாக காணொலி ஒன்றை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
அதில், வீட்டு வேலைக்கு ஆள் தேடுபவர்களின் இடத்திற்கே சென்று, அவர்களுக்குத் தேவையான ஆட்களை பணிபுரிய அமர்த்துவதாகக் கூறி, கமிஷனாக 5 ஆயிரம் ரூபாய் வாங்கிச் செல்வார். இரண்டு நாள்கள் ஆகியும் வேலை ஆட்கள் யாரும் வராத போதுதான், அந்தப் பெண் ஏமாற்றிச் சென்றது தெரிய வரும். 5 ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறினர்.
இதனால், அசோக் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் அமுல் என்றும், அமுல், புவனேஸ்வரி, ரோஜா ஏஜென்சி எனப் பலப் பெயர்களில் நிறுவனம் நடத்தி மோசடி செய்துள்ளதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அமுல் மீது பல புகார்கள் வந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் மோசடிப் பெண் அமுல் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மோசடிப் பெண் அமுலை காவலில் எடுத்து, எத்தனை ஆண்டுகாலம் மோசடி செய்துள்ளார்; யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.