ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பழனிவேல் தியாகராஜன், சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16 ஆயிரத்து 580 கோடியை விடுவிக்காமல், வங்கிகளிடம் கடன் வாங்கச் சொல்லி மத்திய அரசு தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. 2017-2018, 2018-2019ஆம் ஆண்டுகளில் ஜிஎஸ்டி என்று வசூலிக்கப்பட்ட ரூ.1.07 லட்சம் கோடியை பொதுக்கணக்குக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
நாளைய கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசே வழங்க மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு துணிச்சல் இருந்தால் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவாரா? அதிமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் அவர்களை பாஜக அரசு விட்டு வைத்திருக்காது.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களை ஆதரிப்பதன் மூலம் அண்ணா, ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைக்கின்றனர். ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் திறமையான நபர்களை அமர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.