சென்னை: கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சொதிக்குப்பம் கிராமத்தில், உப்பனாறு கரையில் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு மாங்குரோவ் காடுகளை, ஆலமரம் எனும் தொண்டு நிறுவனம் அமைத்தது.
தானே புயலிலும், 2015ஆம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் அழிந்து விட்டதாகவும், அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிடக் கோரி, ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாங்குரோவ் காடுகள் சேதமடைந்துள்ளதாக நேரில் ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை அளித்ததாகவும், அதன்படி, மீண்டும் இந்த காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மீண்டும் அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால்,சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மத்திய அரசிற்கு திட்டம் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அலையாத்தி காடுகள் இருந்த இடத்தில் மீண்டும் அதை அமைப்பதற்கான நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளபோது, ஏன் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கான காரணங்களை கண்டறிந்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சிறையில் கொசுக்கடி: மன உளைச்சலில் மாத்திரை எடுக்க மறுத்த ஜெயக்குமார்