சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவில், ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களை ஈபிஎஸ் நீக்கினார். அப்போது இருந்து அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது ஓபிஎஸ் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஈபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்சை நீக்கி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம் செய்தனர்.
இதற்கு, ஈபிஎஸ் தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். "அதிமுக விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவராக என்னுடைய கடமையைச் செய்வேன்" எனப் பலமுறை சபாநாயகர் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக ஓபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்குக் காலையில் கடிதம் எழுதியிருந்தார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படுவதால் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பாக எங்கள் தரப்பைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஈபிஎஸ்ஸும் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: அதிமுக சார்ந்த முடிவுகளை தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்