சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை 2021 விவாதத்தின்பொழுது பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் பெயரினை எழுதும்பொழுது பெயர் மட்டும் அல்லாது, பெயரின் முன்னெழுத்தையும் (initials) தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவின் முக்கிய அம்சங்கள்
- முதலமைச்சர் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை தமிழிலேயே கையெழுத்திடவும் ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது, முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத அறிவுறுத்தப்படுகிறது.
- தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும்பொருட்டு தமிழை முதன்முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.
- பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும், தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவர மாணவர்கள் பள்ளிக்குச் சேர அளிக்கும் விண்ணப்பம் வருகைப்பதிவேடு பள்ளி கல்லூரி முடித்துப் பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினைக் கொண்டுவரவும், மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.
- தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உள்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவுசெய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரசுத் துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையில்படும் வகையில் தமிழின் பெருமையைச் சுட்டிக்காட்டியும், தமிழில் கையொப்பமும், தமிழில் கையொப்பமிடுவதைப் பெருமிதப்படுத்தும்வகையில் சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- மேலும் அரசின் உத்தரவு உடனே நடைமுறைக்கு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN WEATHER: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு