சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய அறுவை அரங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'நவீன அறுவை சிசிக்சை அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பல்வேறு வசதிகள் உள்ளன. பேரிடர் காலங்களில் கிருமி நீக்கி நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் எதிர்ப்புச்சக்தி குறித்த கணக்கெடுப்பில் விருதுநகர் மாவட்டம் 84 விழுக்காடும், சென்னையில் 82 விழுக்காடும், ஈரோடு போன்றப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கிறது.
கரோனாவைத் தடுக்க கூடுதல் தடுப்பூசி
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்குத் தடுப்பூசிகளை கூடுதலாகத் தருவது, மருத்துவ கட்டமைப்புகளை செய்து தருவது போன்ற பணிகள் செய்து தரப்படும். தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் மாநகராட்சி உத்தரவையடுத்து 9 இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் கூடுதல் கூட்டம் இருக்கும் இடங்களில் பேரிடர் கால விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 6,7,9,10,13ஆகிய மண்டலங்களில் தொற்று, சற்று கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. அதனை சுகாதாரத்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம்
கேரளாவைப் பொறுத்தவரை, கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 22ஆயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. அதனைக் கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுத்தாலும், தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
எனவே, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி விடியற்காலையில் இருந்து கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள் ஆர்டி பிசிஆர் சோதனை முடிவுகளை அவசியம் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் 2 தவணை போட்டு 14 நாட்கள் ஆனவர்கள் தமிழ்நாட்டிற்குள் சான்றிதழ்களைக் காண்பித்து வரலாம். இதற்கான அறிவுறுத்தல் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
விரைவில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் புதிதாக வரவுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் தேவையான ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்காரணமாக, மத்தியக்குழு தற்போது அவற்றை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நேற்று நாமக்கல் மருத்துவக்கல்லூரிக்கு மத்தியக்குழுவினர் வருகை தந்து ஆய்வு நடத்தினர். விரைவில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்தியக்குழு நேரில் வந்து ஆய்வு நடத்திய பின்னர், மாணவர் சேர்க்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்