சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று (டிச.5) இரவு முழுவதும் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வாகனத் தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு மர்ம நபர் ஒருவர் மூலம் பார்சல் ஒன்று வந்துள்ளது. குற்றப்பிரிவு ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லாததால் நிலையக் காவலர்கள் அந்தப் பார்சலை மர்ம நபரிடம் இருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
பார்சல் மீது சந்தேகம்
இதனையடுத்து, சுமார் 8.30 மணியளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வி ரோந்துப் பணி முடிந்து காவல் நிலையம் வந்தபோது காவலர்கள் பார்சல் குறித்த விவரத்தைக் கூறியுள்ளனர். பார்சலைக் கண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சந்தேகமடைந்து உதவி ஆணையருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் உதவி ஆணையரும் பார்சல் மீது சந்தேகம் அடைந்து வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் அளித்தார்.
சோதனை
அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு மோப்ப நாய் ராம்போவுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை சட்டப்பேரவை உறுப்பினர் வளாகத்திற்கு அருகேயுள்ள காலி மைதானத்திற்குக் கொண்டு சென்று சோதனையிட்டனர். அதன், பின்னர் அதில் வெடிக்கும் தன்மையுடைய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து பார்சலை திறந்து பார்த்தனர்.
மர்ம நபர் யார்?
அதில் சாக்லேட் மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியவை இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மர்மப் பார்சல் குறித்த பரபரப்பு அடங்கியது. மேலும், காவல்துறையினர் பார்சலைக் கொண்டு வந்தவர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை