சென்னை: அதிமுகவில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலைக் கிளப்பியது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் இருந்த நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். 2017ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ், மீண்டும் ஒரு சில நிபந்தனைகளுடன் அன்று முதலமைச்சராக இருந்த ஈபிஎஸ் தலைமையில் இணைந்தார்.
அதிமுக தொண்டர்கள் சோர்வு: அன்றில் இருந்து அதிமுகவில் இரட்டைத் தலைமை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். இதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்த இரட்டைத் தலைமை போதிய வெற்றியை பெறவில்லை. இதனால் நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும் சோர்வடையும் நிலை ஏற்பட்டது. அதிமுகவின் தற்போதைய போக்கை பயன்படுத்தி நாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜக கூறி கொண்டிருந்தது. சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்ததில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே கசப்பு ஏற்பட்டது.
மாநிலங்களை உறுப்பினர் தேர்தலில் கோபத்தில் இருந்த ஈபிஎஸ் அணியினர் சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ஏதுவாக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதை சரியாக ஈபிஎஸ் அணியினர் பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒற்றைத் தலைமையை எடுத்துவிட வேண்டும் என ஈபிஎஸ் அணியினரும், அதைத் தடுத்து விட வேண்டும் என ஓபிஎஸ் அணியினரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ஓபிஎஸ் நாடிய நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து இறுதியில் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
திமுகவை பாராட்டிய ஓபிஎஸ்: இதில் திமுகவுடன் ஓபிஎஸ்க்கு தொடர்ப்பு, திமுகவை ஓபிஎஸ் பாராட்டி பேசுகிறார் மற்றும் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் முதலமைச்சரை சந்தித்தது போன்ற நிகழ்வுகள் அதிமுகவிற்கு எதிரானது என ஈபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்காக தான் ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கூறுகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் அவையெல்லாம் அரசியல் நாகரீகம் என்றும், மூன்று முறை ஜெயலலிதாவால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவர் தான் உண்மையான அதிமுக என்றும் கூறுகின்றனர்.
அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே போர் உச்சக்கட்டத்தில் உள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்படப்போவது உறுதியாகிவிட்டது. அதிமுகவின் சட்டவிதிப்படி தேர்தல் ஆணையம் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதை முடிவு செய்யும். கடந்த கால வரலாற்றுப்படி இரண்டு தலைவர்கள் சின்னத்திற்கு போட்டி போட்டால் சின்னம் முடக்கப்படும். இப்போது உள்ள காலக்கட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு தான் இறுதியானது. அப்படி சின்னம் முடிக்கப்படும் நிலையில் அதிமுகவின் உண்மையான தலைவர் யார் என நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எம்.ஜி.ஆர் மறைவு: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டு அணிகளாக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஜெயலலிதா 20% வாக்குகளை பெற்று 29 தொகுதிகளை வென்று நான் தான் உண்மையான அதிமுக என நிரூபித்தார். ஜானகி அணி 9% வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். இதனால் ஜானகி தாமாக முன்வந்து ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து சென்றுவிட்டார்.
அதே போல் தான் இப்போதும் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என உருவாக வாய்ப்புள்ளது. அப்படி உருவானால் 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்து, தனது பலத்தை நிரூபித்தால் அவர்களிடம் கட்சி செல்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு அதிமுக விவகாரத்தில் முக்கியமானதாக கருதப்படும். ஏற்கனவே ஈபிஎஸ் தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் ஈபிஎஸ் தரப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.
சின்னம் முடங்கினாலும் பரவயில்லை: இதுகுறித்து நம்மிடையே பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க மாட்டார். இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் 50% உரிமைக்காக ஓபிஎஸ் போராடுவார். முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவிகளை விட்டுக்கொடுத்தது போன்று இதை விடமாட்டார். ஈபிஎஸ்சை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் பரவயில்லை ஒற்றைத் தலைமையை எடுத்து விடவேண்டும் என முயற்சி செய்கிறார். 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா, சேவல் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதனால் இனிவரும் காலங்களில் இரட்டை இலை இல்லாமல் தம்மால் ஒரு மாபெரும் தலைவராக உருவாகலாம் என நம்புகிறார்.
அதிமுகவின் எதிர்காலம் பிளவை நோக்கி தான் செல்லும். சட்டப்பேரவைத் தேர்தலில் எடுத்த 33% வாக்கு பிரிந்து 23%க்கு செல்லும். அதில் இரு அணிகள் எவ்வளவு சதவீதம் எடுப்பார்கள் எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுகவின் பிளவினால் பாஜகவுக்கும், தமிழ் தேசிய அரசியல் செய்வோருக்கும் இதில் இருந்து சிறிதளவு வாக்குப் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
அதிமுகவின் எதிர்காலம்: இறுதியாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இருவரும் செயல்படுவார்கள். 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனங்களை யார் வெல்கிறார்கலோ அவர்களே அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கான தலைவர் என தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஈபிஎஸ்சை தேர்தல் ஆணையம் ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொண்டால் அவருக்கு மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அனைத்து தடைகளையும் முறியடித்து வெற்றி நடை போடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரின் எதிர்கால செயல்பாடுகள் தான் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையில் அரசியல் வேண்டாம் - பல்வேறு தரப்பினர் கருத்து!