கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்ற ஓய்வு பெற்றார். ஓய்வுப் பெற்ற அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு பிரியாவிடை விழா இன்று(டிச.23) நடத்தப்பட்டது. காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை நீதிபதியை பாராட்டி பேசிய அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், “தலைமை நீதிபதி சாஹியின் ஓய்வு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமல்லாமல், நீதித்துறைக்கே பெரிய இழப்பு. தலைமை நீதிபதியின் சிறந்த நிர்வாக திறனால் கரோனா காலத்தில் கோட சென்னை உயர் நீதிமன்றம் அதிக வழக்குகளை முடித்து வைத்தது.
இதனையடுத்து ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, “முழு திருப்தியுடன் பணி ஓய்வு பெறுகிறேன். அதற்கு உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும், நீதிமன்ற அலுவலர்களுக்கும் நன்றி. பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கபடும்போது, சட்டத் துறைக்கு மட்டும் ஏன் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் கைகோர்க்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
கரோனாவின் போது சிகிச்சை அளித்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனை சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தலைமை நீதிபதி, ஏற்புரை முடிக்கும் தருவாயில் நா தழுதழுக்க உரையை நிறைவு செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி ராஜினாமா செய்ததையடுத்து, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணியாற்றிவந்த ஏ.பி.சாஹி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலவச பட்டா முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவு!