கரோனா நோய்க் கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. இதற்கு வழக்கமாக உபயோகப்படுத்தும் தண்ணீரைவிட கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. ஊரடங்கு காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் சமைப்பதற்கும் குடிப்பதற்கும் இதர பயன்பாட்டுக்கும் வழக்கமாக உபயோகப்படுத்தும் தண்ணீரைவிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் கோடை காலத்துக்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்னை மக்களை வாட்டி வதைக்கிறது. கரோனா நோய்க் கிருமி ஒரு பக்கமிருக்க, தண்ணீர் பிரச்னை மற்றொரு பக்கம் மக்களை வருத்தமடையச் செய்துவருகிறது.
நிலத்தடி நீர் மிகவும் குறைவான நிலையை அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. சென்னை பகுதிகளில் லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் முற்றிலுமாக குறைந்துள்ளது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம்செய்யப்படுகிறது.
தண்ணீர் லாரி வந்தவுடன் மக்கள் குடங்களை எடுத்து தண்ணீர் பிடிக்க கூட்டம் கூட்டமாக நின்று தண்ணீர் பிடிக்கின்றனர். இதனால் சமூக இடைவெளியின்றி நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் பிடித்துவருகின்றனர். இது ஒருபுறமிருக்க குடிநீருக்காக விற்கப்படும் கேன் விலை அதிகமாகிவிட்டது ரூபாய் 25 முதல் 30 விற்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் கூறுகையில், "தண்ணீர் கிடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. தண்ணீர் லாரிகள் இரண்டு நாள்களுக்கு ஒருமுறைதான் இங்கே வருகின்றது. அதும் 2 ரூபாய்க்கு 3 குடம் விகிதம் தண்ணீர் பிடிக்கிறோம். அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 முதல் 7 குடங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
இது மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வாறு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பிற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இந்தத் தண்ணீர் பிரச்னைக்கு அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.