இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கும் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட ரூ. 2.87 லட்சம் விவகாரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற அவர், வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 47.83 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 98.71 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.