தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்.06) அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சதய்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் குறைந்தபட்சமாக அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விழுக்காடு பின்வருமாறு:
முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.60 விழுக்காடும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் 73.65 விழுக்காடும், திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேபோன்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72 விழுக்காடும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் 67.43 விழுக்காடும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.