வ.உ.சிதம்பரனாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " சிதம்பரம் கைதுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினின் குரல் மென்மை ஆகிவிட்டது. சிதம்பரம் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் மத்திய அரசை எங்கேயாவது கடுமையாக விமர்சித்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாடு மக்களுக்கு நியாய விலை கடைகளில் கிடைக்கக்கூடிய இலவச அரிசி எப்போதும் போல வழங்கப்படும். மேலும் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும். இதனால் பொது விநியோகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.