சென்னை : ரோல்ஸ் ராய்ஸ் இறக்குமதி சொகுசுக் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கின் உத்தரவில் நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது.
அப்போது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நிலுவை வரித்தொகையான 32 லட்சத்தை 30 ஆயிரத்தை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
நடிகர்கள் நுழைவு வரி செலுத்தவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.
இந்நிலையில் விஜய் மீதான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கி நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க : குடும்பத்துடன் இணைந்தாரா விஜய்? ரசிகர்கள் மகிழ்ச்சி