சென்னை : சுற்றுச்சூழல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தினார்கள்.
சென்னை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வந்தவர் பாண்டியன். இவர் பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் கிடைத்தது.
கோடிகள் குவித்த பாண்டியன்
இதனடிப்படையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் அலுவலகம் மற்றும் சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத பணம் 1.37 கோடி,3 கோடி தங்கம்,7 கோடி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பாண்டியனுக்கு சொந்தமான வீடு, அவரது உறவினரின் வீடுகளிலும் சோதனை நடத்திய போது பாண்டியன் 10 மடங்கு சொத்துக்கள் குவித்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டது.
மீண்டும் சோதனை
பாண்டியன் 10 மடங்கு சொத்துக்கள் குவித்திருப்பது விசாரணையில் தெரியவந்ததால் அந்தச் சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புதுறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியன் வீட்டில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் லஞ்ச ஒழிப்புதுறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாண்டியனின் சொத்துக்கள் குறித்தான விவரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சேகரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் சொத்து குவித்ததற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் லஞ்ச ஒழிப்புப்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக்குவிப்பில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்ற விசாரணையிலும் லஞ்சஒழிப்பு காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : பொறுப்பேற்ற முதல்நாளே ரெய்டு விட்ட ஆட்சியர்!