முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, ஆசிரியர் தின விழா நடைபெறவில்லை.
எனவே, நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விருதுகளை அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர்கள் வழங்குகின்றனர்.
அதன்படி, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் இருந்து, 330 ஆசிரியர்களுக்கும், சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருந்து 32 ஆசிரியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும், சமூக நலத்துறையின் ஆசிரியர் ஒருவருக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் 10 பேருக்கும் என மொத்தம் 375 பேருக்கு இந்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தலைமைச்செயலகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். அதைத் தொடர்ந்து மாவட்டங்களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. செப்டம்பர் 5ஆம் தேதி நடக்க இருந்த நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி மறைவு காரணமாக 7ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் மாணவர்கள் வளாக தேர்வு வேலைவாய்ப்பிற்கு தயாராவது எப்படி?