சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கீடு விஷயத்தில் கால தாமதம் ஆக்க கூடாது என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு, அவர் சட்ட வல்லுநர்களை கொண்டு கண்டிப்பாக இதற்கான நடவடிக்கை செய்வோம் என்று கூறினார்.
மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காமல் உயர் சாதினருக்கு 10% இடஒதுக்கீடு கிடைத்து உள்ளது. அதே போல சாதி வாரி கணக்கெடுப்பை அரசு முன்னெடுத்தால் எங்களுகான சமூக நீதி கிடைக்கும். சட்டமன்றத்தில் நான் இதை பற்றி கோரிக்கை வைத்த போது தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
10.5% இட ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசின் செயல்பாடுகள் மீது தங்களுக்கு அதிருப்தி இருக்கிறதா என்று செய்தியாளர் கேள்விக்கு, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு மந்தமாக செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அனைத்து மக்களின் சாதியையும் கணக்கெடுத்து சாதி வாரி கணக்கெடுப்பை முறையாக எடுக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல சாதியினர் தமிழ் சமூகத்தை சாராதவர்கள் அவர்கள் மொத்தமாக தமிழகத்தின் இட ஒதுக்கீடை பெறுகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தை சாராதவர்கள் அரசின் பல்வேறு பணிகளில் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நாங்கள் ஒரு சாதிக்கு மட்டும் ஒதுக்கீடு கேட்கவில்லை சாதிவாரி கணக்கீடு எடுத்த பின்னர் பிற சாதிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்போம். இந்த புள்ளி விவர கணக்கை மாநில அரசு நினைத்தால் 3 வாரத்தில் செய்யலாம். மத்திய அரசும் இதற்கு நிதி உதவி செய்ய முடியும்.
திமுக அரசு சமூக நீதி இல்லாத அரசு என்று கூறவில்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என்றே தெரிவிக்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: புதிய சாப்ட்வேர் கண்டுபிடித்து சாதிக்க வேண்டும்... பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற ரஞ்சிதா